Stranger Than Paradise | Jim Jarmusch


Stranger Than Paradiseஐ நான் ஜார்முஷின் “எதுவும் நடக்காத” சினிமாவின் மிக முக்கியமான ஆரம்பகாலப் படைப்புகளில் ஒன்றாகப் பார்க்கிறேன். எனக்கு இதில் முக்கியமான விஷயம் “மெதுவானது” என்பதைக் காட்டிலும், சினிமா எதையெல்லாம் வழக்கமாக முக்கியம் என்று கருதுகிறதோ, அதை ஜார்முஷ் திட்டமிட்டே முக்கியமற்றதாக ஆக்குவதுதான்.

படத்தில் பெரிய நாடகீய நிகழ்வுகள் இல்லை. ஈவா வருகிறாள், வில்லியுடன் இருக்கிறாள், அவர்களுக்குள் கொஞ்சம் உரையாடல் நடக்கிறது. பின் எட்டி வருகிறான். அவர்கள் கிளீவ்லேண்ட் செல்கிறார்கள். பின்பு ஃப்ளோரிடா செல்கிறார்கள். படம் முடிகிறது. ஆனால் இந்த நிகழ்வுகளுக்கு வழக்கமான சினிமா கொடுக்கும் உணர்வுபூர்வமான அழுத்தம் இங்கே கிடையாது. ஒரு காட்சி முடிந்ததும் அடுத்த காட்சிக்கு இடையில் கருப்புத் திரை வருகிறது. அந்த இடைவெளியே ஒரு முக்கியமான சினிமா உத்தியாக இருக்கிறது.

வில்லி மிகவும் சுவாரசியமான கதாபாத்திரம். அவன் வாழ்க்கையில் ஒரு பெரிய இருப்பியல் நெருக்கடியில் இருப்பது போலவும் இல்லை; அதே நேரத்தில், அவன் வாழ்க்கையில் முழுமையான ஈடுபாடோடும் இல்லை.

ஈவாவைப் பார்த்தாலும், எட்டியைப் பார்த்தாலும், அவர்களுடைய எதிர்வினைகள் பெரும்பாலும் சமதளமாகவே இருக்கின்றன. உரையாடல்கள்கூட முக்கியமான வெளிப்பாடுகளாக மாறுவதில்லை. இதனால் கதாபாத்திரங்கள் “ஆழமானவை” என்று தோன்றுவதில்லை. மாறாக, அவர்களுடைய வெறுமையையும் சலிப்பையும் நாம் கவனிக்க ஆரம்பிக்கிறோம்.

ஈவாவிடம் மட்டும் ஒரு விதமான ஆர்வம் தென்படுகிறது. அவள் அமெரிக்காவை முழுமையாக ஏற்றுக்கொள்ளவில்லை. வில்லியும் அமெரிக்காவில் இருப்பவன்தான். ஆனால் அவனும் அந்த உலகத்திற்குள் முழுமையாகப் பொருந்தவில்லை. அவன் ஹங்கேரியை முழுமையாக வெறுத்து, ஒரு அமெரிக்கனாக வாழ நினைத்தாலும் கூட. படம் ஒரு புலம்பெயர்ந்தவரின் கதை மட்டுமல்ல. இது சேர்ந்திருத்தல் பற்றிய படம். அவர்கள் ஒரே நாட்டில் இருக்கிறார்கள், ஒரே மொழியில் பேசுகிறார்கள், ஒரே இடத்தில் வசிக்கிறார்கள். ஆனால் யாரும் உண்மையில் “வீடு” என்ற இடத்தை அடைந்துவிட்டதாக உணரவில்லை.

அதனால்தான் Stranger Than Paradise என்ற தலைப்பு மிகவும் சரியானது என்று தெரிகிறது. இதன் மூலம் ஜார்முஷ் அடையாளம், பன்முகப் பண்பாட்டுத்தன்மை போன்றவற்றை உரையாடுகிறார்.

“World becomes ordinary precisely because cinema stops telling us what is extraordinary about it” என்ற வாசகத்தைப் படத்தைப் பற்றி இணையத்தில் படித்துக்கொண்டிருக்கும்போது கடந்து வந்தேன். இந்த வாசகம் Stranger Than Paradiseக்கு மிகவும் பொருத்தமான ஒன்று.

Comments

Popular posts from this blog

வெர்ட்டிக்கல் சினிமா - புது அழகியலா ? புது வியாபாரமா ?

A Letter of Motivation by Benoit Rouilly

Contemplation Cinema Screening (FAQ)