வெர்ட்டிக்கல் சினிமா - புது அழகியலா ? புது வியாபாரமா ?



சமீபத்தில் ஒரு வீடியோ பார்த்தேன். 'கதை ஷார்ட்ஸ்' என்று வெர்ட்டிக்கல் சீரிஸை (vertical series) உருவாக்கும் ஒரு நிறுவனம். அது பல இளம் கலைஞர்களை வெர்ட்டிக்கல் சீரிஸ் உருவாக்குமாறு ஊக்கப்படுத்துவதோடு, அதற்கான முதலீடும் செய்து வருகிறது.

பல சிந்தனைகள் மேலெழும்பின. முதலில் இதுபோன்ற வெர்ட்டிக்கல் சீரிஸ்களை 'சினிமா' என்று வகைப்படுத்த முடியாது என்கிற ஒரு முடிவுக்கு வருகிறேன். இந்த முடிவுக்கு வர காரணங்கள் இருக்கின்றன.

1."கலையை ஒரு குறிப்பிட்ட ஆஸ்பெக்ட் ரேஷியோவில் (aspect ratio) அடக்கிவிட முடியுமா? ஹாரிஜாண்டலில் (horizontal) இருப்பதுதான் கலை என்று யார் முடிவு செய்ய முடியும்?"


2. "ஒவ்வொரு புதிய தொழில்நுட்பமும் இதுபோன்ற சவால்களைச் சந்தித்திருக்கிறது. சைலண்ட் சினிமாவில் இருந்து சவுண்ட், பிளாக் அண்ட் வைட்டிலிருந்து கலர், ரியலிலிருந்து அனிமேஷன், கைபட வரைந்த அனிமேஷனிலிருந்து கம்ப்யூட்டர் கிராபிக்ஸ்."


ஒவ்வொரு புதிய தொழில்நுட்பம் அறிமுகத்தின்போதும் அங்கு ஏற்கனவே நிலவி வரும் 'பழைய' தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி வருபவர்கள் கொதித்து எழுவார்கள். அவர்கள் பழகி வந்த குறிபிட்ட சினிமா பயிற்சி முறை கேள்விக்குள்ளாக்கப்படுகிறது, அதன் இருப்புகூட.

சரி, நமக்கு இந்த இரண்டு வகையான பிரச்சனைகளும் உண்டா என்கிற கேள்வியை கேட்டுக்கொண்டே இந்த வாதத்தை முன் நகர்த்துகிறேன்.

இந்த இரண்டு நிமிட வெர்ட்டிக்கல் சினிமா, எந்த வகையிலும் சினிமா கலையில் உண்மையான பரிணாமம் இல்லை என்பது என்னுடைய அவதானிப்பு. இது முழுக்க சந்தைப்படுத்துதலுக்காக மட்டுமே உருவாக்கப்பட்ட ஒரு வடிவம்.

சினிமா கலை உருவாகி வந்த ஆரம்ப காலத்தில் பெரும்பாலும் இரண்டு நிமிடங்களே இருக்கும் குறும்படங்கள்தான் எடுக்கப்பட்டன. அதன் ஆஸ்பெக்ட் ரேஷியோ (aspect ratio) 4:3 ஆக இருந்தது. பிறகு அது வைடாக(Wide) விரிவடைந்தது.

இங்கு ஒரு கேள்வி வரலாம். 4:3 ஆக இருந்த ஆஸ்பெக்ட் ரேஷியோ ஏன் வெர்ட்டிக்கலாக பரிணமிக்காமல், ஹாரிஜாண்டலாக வளர வேண்டும்?

நம்முடைய அன்றாட வாழ்க்கையில், நாம் சந்திக்கும் நிகழ்வுகள் பெரும்பாலும் வலது-இடது புறமாக மட்டுமே இருந்து வருகின்றன. நடப்பது, மற்றவர்களிடம் அருகருகே நின்று பேசுவது, நம்முடைய பார்வையை உலாவ விடுவது. அதே நேரத்தில் மரத்தை, கட்டிடங்களை நாம் வெர்ட்டிக்கல்களில் பார்க்கிறோம்.

இப்போது ஒரு ரோட்டில் நின்றுக்கொண்டிருக்கிறோம். அதை நாம் இரண்டு வகையான கருவிகளைப் பயன்படுத்தி ஒரு மனிதனைப் பதிவு செய்கிறோம் என்று வைத்துக்கொள்ளலாம்.

ஹாரிஜாண்டல் பிரேமில் (horizontal frame) அவனுடைய முழு உடலையும் சேர்த்து சுற்றி இருக்கும் பிற விஷயங்களையும் (கடைகள், வீடுகள், ஆள் நடமாட்டம்... இன்னும் பல) பதிவு செய்ய முடியும். வெர்ட்டிக்கல் பிரேமில் (vertical frame) பெரும்பாலும் முழுக்க மனிதர்களின் உடல்தான் அந்த பிரேமை(frame) நிரப்பும்.

ஒருவேளை வைட் லென்ஸை (wide angle lens) வைத்து வெர்ட்டிக்கலாக எடுத்தால் மனிதனைத் தாண்டி மேலும் கீழும் அதிகமான ஸ்பேஸ்கள் (space) உருவாகலாம். ஆனால் என்ன? மேலே வானமும், கீழே தரையும்தான்.

அதைத் தாண்டி இந்தக் காணொளியில் அவர்கள் கூறுவது, இன்ஸ்டாகிராமில் மைண்ட்லெஸ் ஸ்வைப்பிலிருந்து விடுதலை அடையும் வகையில் நாங்கள் இங்கே லீனியர் கண்டென்ட்ஸை (linear content) வழங்குகிறோம் என்பதுதான். ஆனால் அதே இரண்டு நிமிடத்தில் தான் என்பது இவர்களையும் இன்ஸ்டாகிராம்(இவர்கள் பிரச்சனை என்று கூறும்) ரீல்ஸையும் பெரிதும் வேறுபடுத்தவில்லை.

2013 ஆம் ஆண்டு சோனிக் ஆக்ட்ஸ் என்கிற நிறுவனம் முதலீடு செய்து 14 வெர்ட்டிக்கல் சினிமாக்களை ஒரு குறிப்பிட்ட வெர்ட்டிக்கல் புரொஜெக்ஷனில் (projection) திரையிட்டார்கள்.

ஆனால் இந்த 14 படங்களும் எக்ஸ்பெரிமென்டல் (experimental) அவாண்ட்-கார்ட் (avant garde) படங்கள். இதைப் பற்றி அவர்கள் கூறுவது:

"For the Vertical Cinema project we ‘abandoned’ traditional cinema formats, opting instead for cinematic experiments that are designed for projection in a tall, narrow space. It is not an invitation to leave cinemas – which have been radically transformed over the past decade according to the diktat of the commercial film market – but a provocation to expand the image onto a new axis. This project re-thinks the actual projection space and returns it to the filmmakers. It proposes a future for filmmaking rather than a pessimistic debate over the alleged death of film."




இது எந்த வகையிலும் வியாபார நோக்கத்துக்காக அவர்கள் செய்யவில்லை. அவர்கள் வெர்ட்டிக்கல் ஸ்பேஸ்(space) அழகியல் ரீதியாக, சிந்தனை ரீதியாக என்னென்ன சாத்தியங்களை உண்டு செய்கிறது என்பதைப் பரிசோதித்துப் பார்க்கிறார்கள்.

ஆனால் இங்கே? அதே வணிக சினிமா முறைதான். அதே வகையான கதையாடல்தான் (narrative). ரோஹினி கூறுவது போல் இந்த ப்ளாட்ஃபார்மில் Full Feature Length சினிமாவில் சொல்ல முடியாத கதை கருக்களை சொல்லலாம். ஆனால் அதே இரண்டு நிமிடம். இரண்டு நிமிடத்தில் நாம் எதை சொன்னாலும் அது மறதி நோயால் பீடிக்கப்பட்டவனின் எதிர்வினையாகத்தான் இருக்கும்.

சரி இரண்டு நிமிடங்களில் எந்த குறும்படமும் இல்லையா ? யூடியூபில் இருக்கிறதே ? ஆம் ஆனால் அது எந்த வகையில் இன்று இருக்கும் வெர்ட்டிக்கல் சினிமாவின் குணாதிசியங்களை உள்ளடக்கவில்லை என்று நம்புகிறேன். Hook, Cliffhanger .


இன்று சினிமாவைப் பற்றிய மிகப்பெரிய தவறான நம்பிக்கை என்னவென்றால், அதன் எதிர்காலம் திரையின் வடிவத்தால் (screen format) தீர்மானிக்கப்படும் என்பதுதான். "மக்கள் இப்போது போனில் பார்க்கிறார்கள். அதனால் சினிமாவும் இனி வெர்ட்டிக்கலாகிவிடும்" என்று பலர் நம்புகிறார்கள். இந்த வாதம் தொழில்நுட்ப ரீதியாக புத்திசாலித்தனமாகத் தோன்றலாம். ஆனால் அது மனிதனைப் பற்றிய ஒரு மிக ஆழமான தவறான புரிதலின் மேல் நிற்கிறது. இந்த வாதத்தின் அடிப்படையாக இருப்பது என்னவென்றால், மனிதன் எதற்குத் தன்னைப் பழக்கிக்கொள்கிறானோ, அதுவே அவனுடைய இயற்கையான பரிணாமம்.

ஆனால் மனித வரலாறு வேறு ஒன்றைச் சொல்கிறது.

மனிதன் புகையிலைக்கும் பழகினான். முடிவில்லாத நுகர்வுக்கும் பழகினான். சூதாட்டத்திற்கும் பழகினான். இடைவிடாத தூண்டுதல்களுக்கும் பழகினான். அதனால் அவை மனித வாழ்வின் உயர்ந்த வடிவங்களாக மாறிவிடவில்லை. ஒரு பழக்கத்திற்கு மூளை தன்னை மாற்றிக்கொள்வது, அந்தப் பழக்கம் மனிதனுக்கு நல்லது என்பதற்கான சான்றல்ல. அது மூளையின் நெகிழ்வுத்தன்மைக்கான சான்று மட்டுமே.

அதனால்தான் "மக்கள் வெர்ட்டிக்கல் வீடியோவுக்கு பழகிவிட்டார்கள்" என்பது ஒரு சந்தை உண்மை தான்; ஆனால் அது ஒரு கலை உண்மை அல்ல.

சினிமாவைப் புரிந்துகொள்ள வேண்டுமென்றால், முதலில் மனித மூளையை புரிந்துகொள்ள வேண்டும்.

மனித மூளை சினிமாவைப் பார்ப்பதற்காக உருவாக்கப்படவில்லை. சினிமாவுக்கு வெறும் நூற்று முப்பது வருட வரலாறுதான். ஆனால் மனித மூளை இலட்சக்கணக்கான வருட பரிணாமத்தின் விளைவு. அப்படியென்றால் ஒரு கேள்வி எழுகிறது. நூற்று முப்பது வருடங்களுக்கு முன்பு இல்லாத ஒரு கலை வடிவத்தை மனிதன் எப்படி உடனடியாகப் புரிந்துகொண்டான்? ஏனென்றால் சினிமா மனித மூளைக்கு புதிய திறனைக் கற்றுக்கொடுக்கவில்லை. அது ஏற்கனவே இருந்த திறன்களை ஒன்றாக இணைத்தது. நாம் உலகத்தைப் பார்க்கும்போது, இயக்கத்தை உணர்கிறோம் (motion perception). முகங்களை அடையாளம் காண்கிறோம் (face recognition). தூரங்களைப் புரிந்துகொள்கிறோம் (depth perception). அடுத்த நொடி என்ன நடக்கும் என்று முன்கணிக்கிறோம் (predictive processing). பிறரின் உணர்ச்சிகளை நமக்குள் பிரதிபலிக்கிறோம் (empathy). சினிமா இந்த எல்லா நரம்பியல் அமைப்புகளையும் ஒரே நேரத்தில் செயல்படுத்தும் முதல் கலை வடிவமாக மாறியது. அதனால்தான் ஒரு திரைப்படம் வெறும் படங்களின் தொடராகத் தெரியவில்லை. அது ஒரு உயிருள்ள உலகமாகத் தெரிகிறது.

அதுபோல அந்த வீடியோவில் மனிதர்களின் attention span குறைந்துவிட்டது; அதற்கேற்றாற்போல் நாம் கதை சொல்ல வேண்டும் என்று கூறுகிறார்கள். எனது தம்பிக்கு மூன்று மணி நேரம் ஒரு படத்தை பார்ப்பது கடுமையான விஷயம். படத்தை அவன் நான்கு அல்லது ஐந்து நாட்களில் பார்த்து முடிப்பான். ஆனால் அவனால் மூன்று மணி நேரம் ரீல்ஸ் பார்க்க முடிகிறது. இது எப்படி சாத்தியம்? அவனது attention அங்கு எப்படி நிலையாகிறது? இங்கு நம்மால் ஒரு முழு கால்பந்து விளையாட்டை எந்தக் குறுக்கீடுகளுமின்றி பார்க்க முடிகிறது. board games-ஐ விளையாட முடிகிறது. ஆதலால் நமது attention span இங்கு பிரச்சனை இல்லை. மாறாக ஒரு செயலில் இருக்கும் attention economy தான் சிக்கல் என்று நினைக்கிறேன். இன்றைய முதலாளித்துவ உலகத்தில் இந்த attention economy-யைப் பிடிப்பதற்குத்தான் பாடுபடுகிறது.

இங்கு ஆஸ்பெக்ட் ரேஷியோ (aspect ratio) பிரச்சனை இல்லை. ஆனால் அதை மீண்டும் இன்ஸ்டாகிராமின் மாறுவேடமாகவே பார்க்க முடிகிறது.

இது எந்த வகையிலும் புதிய அழகியல் கிடையாது, வியாபாரம் செய்வதற்கான புதிய வழி மட்டுமே.

இந்த கதை ஷார்ட்ஸ் வெர்ட்டிக்கல் சினிமாவும் இதையேதான் பயன்படுத்துகிறது. அதனால்தான் ஒரு எபிசோட் இரண்டு நிமிடமும், அதில் நமது attention economy-யைக் கைப்பற்றுமாறு கதை அமைப்பும் இருக்கிறது. இது இன்னொரு முதலாளித்துவ அணுகுமுறையைத் தவிர கலையின் பரிணாமம் அல்ல.




அந்த காணொளியை காண: https://www.youtube.com/watch?v=DHNodtlHpKI&t=2s



Comments

Popular posts from this blog

A Letter of Motivation by Benoit Rouilly

Contemplation Cinema Screening (FAQ)