மனித நிலையும் அந்நியமாதலும் | அப்துல் ரஹ்மான்
‘எந்திரங்கள் பெருந்த அளவில் பயன்படுத்தப்படுவதாலும், பொருள் உருவாக்கத்திற்கான உழைப்பு வெவ்வேறு உட்பகுதிகளில் பிரித்தளிக்கப்படுவதாலும் பாட்டாளிகளின் பணித்திறன் அனைத்துத் தனிசிறப்புகளையும் இழந்துவிட்டது. அதைத் தொடர்ந்து பணித்திறன் சிறந்த உழைப்பாளி மீதான ஈர்ப்பும் இல்லாது போய்விட்டது. அவன் எந்திரத்தின் ஓர் அங்கமாகிப் போகிறான். அவனது உழைப்பு என அவனிடமிருந்து எதிர்பார்க்கப்படுவதெல்லாம் மிகமிக எளிதான, மாற்றமே இல்லாத ஒருபுறத்தான பணியை, அதைச் செய்வதற்கான நுட்பத்தை எளிதாகப் புரிந்துகொள்ளவேண்டும் என்பது மட்டுமே’
கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை
காட்சி 1:
அவள் : எனக்கு நான் வேலை பாக்குற அலுவலகத்துல ஒரு Belonging Feel வரல.
அவன் : அப்படியா?
அவள் : ஏதோ இது எனக்கான இடம் இல்ல, என் கூட வேலை பாக்குறவங்க எனக்கான ஆளுங்க இல்லன்னு தோணுது. அவங்க கூட என்னால கனெக்ட் பண்ணிக்க முடியல.
காட்சி 2 :
அவன் : நீ பாக்குற வேலை உனக்கு திருப்தியா இருக்கா?
இவன் : என்ன இப்படி கேட்டுட்ட.. திருப்தியா தான் இருக்கு. நான் இந்த ஐ.டி வேலைல இருக்குறதால தான் என்னால நான் நினைக்குற பொருட்கள் எல்லாம் வாங்க முடியுது. நான் நினைச்ச இடத்துக்கு போக முடியுது.
அவன் : உனக்கு பேஷன்னு எதுவும் இருக்கா?
இவன் : பேஷனா? எந்த மாறி கேட்குற?
அவன் : ஏதாவது ஒரு வேலை செய்யும்போது உன்னையே நீ உண்மையா உணர முடியும்ல.. இது தான் ‘நான்’ன்னு எந்த வேலை செய்யுறப்ப உன்னால சந்தோஷமா உணர முடியும்?
இவன் சிறிது நேரம் தீவிரமாக யோசித்துவிட்டு அதற்கான பதிலை தேடிக்கொண்டு பிறகு,
இவன் : பயணம் செய்யனும் அதான் என் பேஷன்.
மேலே குறிப்பிட்ட இரண்டு காட்சிகளையும் ஆழ்ந்து பார்த்தோமானால் ஒரு விஷயம் புலப்படும். அது தான் ‘அந்நியமாதல்’.
முதல் காட்சியில் அந்த பெண் தனக்குப் பிடித்த வேலையிலிருந்தாலும் அங்கே வேலை செய்யும் சக ஊழியர்களுடன் அவளால் தன்னை இணைத்துக்கொள்ள முடியவில்லை. அவர்களது நடை ,உடை பேசும் விதம், சிந்தனை, சித்தாந்தம் என்று அதற்கு எந்த காரணம் வேண்டுமானாலும் இருக்க முடியும். அவளுடன் வேலை பார்க்கும் சக ஊழியர்களை அந்த ஐ.டி வேலையின் தாக்கத்தால் ஏற்படும் உளவியல் மாற்றம் அவர்களை அவ்வாறு மாற்றி இருக்கலாம். அந்த யந்திர உளவியலுக்கு இந்த குறிப்பிட்ட பெண் தன்னை மாற்றிக்கொள்ள முடியாமல் இருந்ததினால் அங்கே வேலை பார்க்கும் பிற நபர்களுடன் தன்னை பொருத்தி பார்த்துக்கொள்ள முடியாமல் போகலாம்.
இரண்டாவது காட்சியில் முழு நேரமும் ஐ.டி துறையில் வேலைபார்த்து வரும் வருமானத்தை வைத்து அந்த ஆண் தனக்குப் பிடித்தவற்றை எல்லாம் வாங்குகிறான். அவனிடம் உன்னுடைய பேஷன் என்னவென்று கேட்கும்போது அவனால் உடனுக்குடன் சுலபமாகப் பதில் சொல்ல முடியவில்லை. அவன் தனக்கென்று எந்த ஒரு பேஷனும் இல்லையென்று எதோ ஒன்றை மேம்போக்காக குறிப்பிடுகிறான்.
ஒரு மனிதன் பிற மனிதனிடம் இருந்தும், சமூகத்திடம் இருந்தும், தன்னிடமிருந்தும் பிரிந்து தன்னை எதனுடன் தொடர்பு படுத்தி பார்க்க முடியாத நிலையே அந்நியமாதல் ஆகும்.
இந்த வாழ்க்கை என்னுடைய கட்டுப்பாட்டில் இல்லை, எனக்கு என் வாழ்க்கையின் மேல் எந்த ஒரு அதிகாரமும் இருக்கவில்லை, இந்த உலகில் நிலவும் சட்டதிட்டங்கள் என்னுடைய உள் உந்துதலை தடுக்கின்றது. என்னுடைய சுயத்துக்கு எதிராக இந்த சமூகம் இருக்கிறது என்கிற உணர்வே அந்நியமாதலுக்கான முக்கியமான காரணம் ஆகும்.
இந்த அந்நியமாதல் உணர்வு எவ்வாறு ஏற்படுகிறது ? இது தனி மனித சிக்கலா அல்லது சமூகத்தில் இருந்து உருவாகும் நோயா ? ஒரு குறிப்பிட்ட வரலாற்று சூழலில் ஏற்பட்ட மனித உணர்வா இல்லை காலா காலத்திற்கும் வரலாற்று சுழற்சியில் மனிதர்களை ஆட்கொண்டு வரும் ‘கடந்து செல்லும்’ நிலையா ?
அந்நியமாதலை இருவேறு தத்துவ மரபோடு இணைத்து பார்க்க முடியும். இருத்தலியம் மற்றும் மார்க்சியம். இருத்தலியம் குறிப்பிடும் அந்நியமாதல் என்பது முழுக்க தனிமனித நிலை பற்றியானது. மார்க்சியம் அந்நியமாதலை முதலாளிய சமூகத்தினால் உண்டான ஒரு குறிப்பிட்ட வரலாற்று நிகழ்வாக பார்க்கிறது. முதலாளிய உழைப்பு முறையை, அதன் மனநிலையை ஒழித்துக்கட்டினால் அந்நியமாதலை மனிதன் கடந்துவிடுவான் என்பது மார்க்சியத்தின் முடிவு.
மேலும், அந்நியமாதல் என்பதை முதன் முதலில் ஒரு முழு கருத்தாக வடிவமைத்தது தத்துவயிலாளர் ஹெகல் ஆவார்.
ஹேகலின் அந்நியமாதல் :
ஹேகலை பொருத்தமட்டில் சுயம என்பது வரலாற்றின் ஊடாக சமூகத்தின் வழியே கட்டமைக்கப்படுவது. அந்த சுயம் அந்நியமாதல் என்கிற கட்டத்தை தாண்டியே அது இயல்பாக வளர்ச்சி அடையும். அதாவது ஒரு சுயம் வரலாற்று போக்கில் வளர்ந்து ,அந்நியப்பட்டு, பிறகு அதிலிருந்து விடுபற்று இறுதியாக முரண்பாடுகளை களைத்தெறிந்து சுய விழிப்புணர்வு அடைந்து பின் சுய அங்கிகாரம் பெறுவதே ஆகும்.
இந்த சமுதாயம் என்னுடைய இயல்பை ஒடுக்குகிறது. இந்த ஒடுக்குதல் இல்லையென்றால் என்னுடைய சுயத்தை நான் திடமாக உருவாக்குவேன் என்று சொல்வதை ஹெகல் ஏற்றுக்கொள்ளவில்லை. ஹெகல் கூறும் ஆன்மா(Spirit) என்கிற மனித பிரக்ஞை தன்னையே இரண்டாக பிளந்துகொண்டு, ஒன்றை எதிராக நிறுத்தி அதை புறவயப்படுத்தி அதில் இருந்து முரண்படும். சுய முரண்படுதலும் பிறகு சுய அங்கீசரிப்பு அடைதலுமே அந்நியமாதல் என்கிறார் ஹெகல்.
ஒரு மனிதன் அந்நியமாதலை கடந்து தனி ஆளுமையை அடைவது சமூகத்துடன் ஒட்டி உறவாடியே பெற முடியுமேயொழிய சமூகத்தில் இருந்து ஒதுங்கி வாழ்வதினால் அடைவது இல்லை.
நவீனத்துவத்துக்கு முந்தைய சமுதாயத்தில் ஒரு மனிதன் தன்னை குலம், ஜாதி, மதம், குடும்பம், வர்க்கம் அடிப்படையில்தான் அடையாளத்தை உருவாக்கிக்கொள்வான். அவனுடைய அடையாளம் என்பது அவன் ஏற்றுக்கொள்ளும் சமூக பாத்திரத்தின் வழியாக முடிவு செய்யப்படும். அவனுக்கென்று ‘நான்’ என்கிற எந்த சுயமும் கிடையாது.ன்றும் ஜாதியின் பின்னால் தான் தன்னை அடியாளப்படுத்திக்கொள்கிறான் என்றாலும் முன் நவீன சமூகத்தில் நிலவுவது போன்று இல்லை.
நவீன உலகத்தில் ஒரு மனிதனுக்கு ‘கொடுக்கப்பட்ட’ அல்லது ‘முடிவு செய்யப்பட்ட’ இடம் என்று எதுவும் இருக்கவில்லை. அவன் தன்னுடைய அடையாளத்தை தானே சுயமாக உருவாக்கிகொள்ள முடியும். அவன் சமூகத்தில் எந்த விதமான பாத்திர ஏற்பை ஏற்று நடிக்கிறான் என்று அவனே முடிவு செய்ய முடியும்.
சமூகத்தின் அந்நியமாதல் மற்றும் ஒத்திசைவின்மையை ஹெகல் எதிர்மறையாக பார்க்கவில்லை. மனிதர்களின் இடையே அது பிரிவினையையும் முரண்பாடையும் உருவாக்குவதென்றாலும் அங்கே தான் மனித சுதந்திரமும் சுயமும் வளர்ச்சி பெறும்.
‘உலக வரலாறு என்பது சுதந்திர உணர்வின் முன்னேற்றமின்றி வேறில்லை’ என்று குறிப்பிடுகிறார் ஹெகல். இந்தியா, சீனா போன்ற நாடுகளை அவர் நிலையான நாகரிகங்களாக குறிப்பிடும் வேலையில் அந்த நாடுகள் சுதந்திர தன்மை பெறாமல் வரலாற்றில் ஏதோ ஒரு இடத்தில் தேங்கி கிடப்பதையும் குறிப்பிட்டு, வரலாற்று வளர்ச்சி போக்கில் சேர்ந்து தன்னை படைத்துக் கொள்ளாத நாடுகளாக சீனா, இந்தியாவை குறிப்பிடுகிறார்.
இந்தியாவை அவர் சுதந்திர வளர்ச்சி அடையாத நாடாக குறிப்பிடுவதற்கு காரணம் இங்கு நிலவும் சாதிய சூழலே. யார் யார் என்னென்ன வேலை பார்க்க வேண்டும் என்று பிறப்பில் இருந்தே முடிவு செய்யப்படும் வேலையில் அதில் இருந்து மாற்றம் பெறுவது கடினம். இந்த சாதிய முறைமையை மனித நிலையில் அடக்காமல் இயற்கையாகவே உருவான கட்டமைப்பாக இங்கு ஆதிக்க சாதியால் போதிக்கப்படுவதை குறிப்பிடுகிறார்.
ஹேகலிடம் இருந்தே தன்னை உருவாக்கிக்கொள்கிறார் இளம் மார்க்ஸ். ஹேகலில் தொடர்ச்சியாக இளம் மார்க்ஸை பார்க்க முடியும். பிறகு ஹேகலிடம் இருந்து விடுபற்று முதிய மார்க்ஸ் மூலதனத்தை எழுதுகிறார். மார்க்ஸின் அந்நியமாதல் கருத்தை பார்க்கலாம்.
மார்க்ஸ் இளம் வயதில் எழுதிய Economic and Philosophical Manuscripts of 1844 என்கிற நூலில்தான் முதன் முதலில் அந்நியமாதலை பற்றி குறிப்பிடுகிறார். மார்க்ஸ் மூன்று வகையான அந்நியமாதலை இங்கு பட்டியலிடுகிறார்.
முதலாவது, தன் உழைப்பில் உருவான பொருட்களில் இருந்து ஒரு மனிதன் அந்நியப்படுவது.
இரண்டாவது, உழைப்பில் இருந்து உழைக்கும் மக்கள் அந்நியப்படுவது.
மூன்றாவது, உழைப்பாளர்கள் பிற உழைப்பாளர்களிடம் இருந்து - அதாவது தங்களுக்குள்ளாகவே - அந்நியப்பட்டு போவது.
நான்காவது , மனிதன் தன்னுடைய இன பிறவிக்கென்றே விசேஷமாக இருக்கும் ஆற்றல்களில்(படைப்பாற்றல்) இருந்து அந்நியப்படுவதால், அவன் தன் இனத்தில் இருந்தே அந்நியப்படுகின்றான்.
மார்க்ஸ் உழைப்புக்கு முக்கியத்துவம் அளிக்கிறார்.மார்க்ஸ் உழைப்பை அந்நியமாதல் கருத்தாக்கத்துக்கு வலு சேர்க்கும் பிரத்யேக அம்சமாக காண்கிறார். மனிதனுக்கும் மிருகத்துக்கும் இருக்கும் மிக முக்கியமான வேறுபாடு,மனிதன் ஒரு பொருளை படைக்கும் முன் அந்த பொருளின் இறுதி வடிவை கருத்துருவாக மனதினுள் உருவாக்கிக்கொள்கிறான்.
ஒரு தேனி தனது கூட்டை உள்ளுணர்வின் உந்துதலின் வழியாக அதை கட்டுகிறது.அதற்கு இறுதி வடிவம் என்னவென்று தெரியாது.இன்னும் தெளிவு படுத்த வேண்டுமெனில்,நான் ஒரு வீட்டை கட்டுவதற்கு முன்பு அந்த வீட்டின் வரைபடம் என்னிடம் இருக்கும்.அது எவ்வாறு இருக்கப்போகிறது,கழிவறை எங்கு இருக்க வேண்டும்,வாசல் எங்கு அமைய வேண்டும்,எத்தனை ஜன்னல்கள் இருக்க வேண்டும் என்று தெளிவான ஒரு படிமம் என் மனதினுள் இருக்கும்.இதுவே மனிதனையும் பிற உயிரினங்களையும் பிரிக்கின்றது.அதே நேரம் நாம் உருவாக்கும் பொருட்களை நாம் அழகியல் தன்மையுடன் படைப்போம்.
மனிதன் ஒரு பொருளை படைக்கும்போது அதனுடன் சேர்த்து புதிய தேவைகளை படைக்கின்றான்.அந்த தேவைகளுக்காக ஒரு புதிய பொருளை உருவாக்குகின்றான்.
இது போன்ற மனிதனை பிற ஜீவராசிகளுடன் வேறுபடுத்தி காட்டுவது அவன் உருவாக்கும் செயற்கை உலகம் தான்.
உழைப்பு என்பதை வியர்வை சிந்த மூட்டை தூக்கிக்கொண்டு,எதோ ஒரு தொழிற்சாலையில் கையில் சாயத்துடன் வேலை செய்துக்கொண்டு மனிதன் உயிர் வாழ மட்டுமே மேற்கொள்ளும் செயலாக தவறாக புரிந்துக்கொள்ள கூடாது. ஒட்டுமொத்த சமூகமும் தன்னுடைய கூட்டு படைப்பாற்றல் மூலமாக இந்த இயற்கை உலகை அழகியல் கண்கொண்டு மாற்றி அமைப்பதே உழைப்பு என்பதாகும்.
தன் உழைப்பில் இருந்து உற்பத்தி செய்யப்படும் பொருட்கள் யாவும் உழைப்பாளியின் கட்டுப்பாட்டுக்குட்பட்டவை அல்ல. அது முழுக்க முதலாளியின் விற்பனை வெறியை மையப்படுத்தியே இருக்கும்.அந்த உழைப்பாளி தான் உருவாக்கும் பொருளை அடையும் வாய்ப்பற்றவனாக இருப்பான்.மட்டும் இல்லாமல், உருவாக்கப்படும் ஒரு பொருளின் ஒரு குறிப்பிட்ட பாகத்தை மட்டுமே உற்பத்தி செய்யும் வேலை அவனிடம் கொடுக்கப்படும்.
தெளிவுபடுத்த, ஒரு பிஸ்கட் பாட்டிலின் மூடியை மட்டும் வேலையை ஒருவர் செய்வாரெனில் அவருடைய கைகள் ஒரே வகையான இயக்கத்தில் மட்டுமே இருப்பதை காணமுடியும். கிட்டத்தட்ட ஒரு யந்திரம் போல் அவர் காணப்படுவார்.ஒரு முழு பொருளை உருவாக்கிய திருப்தி கூட அவருக்கு கிடைப்பதில்லை.
பாட்டாளி வர்க்கம் தன்னுடைய உழைப்பு சக்தியை தன் முதலாளியிடம் விற்கிறது.அவனுடைய உழைப்பே ஒரு பண்டமாக மாறுகிறது.உழைப்பு என்கிற பண்டத்தை அவன் உயிர் பிழைப்பதற்காக விற்கின்றான்.அவன் உழைத்து உற்பத்தி செய்த பொருட்களை வைத்து முதலாளி அதுக்கு ஒரு புது மதிப்பை உருவாக்குகின்றான்.
முதலாளிகளின் குறிக்கோள்களுக்கு இணங்க தொழிலாளி தனது குறிக்கோளை கட்டமைத்துக்கொள்கிறான். அவன் உருவாக்கிய பொருளுக்கும் அதை உருவாக்கிய உழைப்பாளிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.
அவன் உற்பத்தி செய்த பொருளிடம் இருந்தே அவன் அந்நியப்பட்டு போகின்றான்.அவன் மனிதத்தன்மையை இழந்து பொருட்களுக்கு ஆட்பட்டு இயற்கையாக உருவான ஒரு யந்திரமாக தன்னை ஒரு அருவமான பிறவியாக அவன் மாற்றிக்கொள்கின்றான்.
அவன் பி.எம்.டபிள்யு கார் ஷோ ரூமில் வேலை செய்பவனாக இருப்பினும் எதோ ஒரு ஓட்டுவீட்டில் தான் வாழ்ந்து வருவான்.ஒருவன் தன்னுடைய உழைப்பை வேறு ஒருவருக்கு விற்கின்றான்.அவனுடைய உழைப்பு அவனுக்கானது இல்லை என்றாகிறபொழுது அவன் அதில் இருந்து அந்நியப்பட்டுபோகின்றான்.
மார்க்ஸ் objectification என்கிற ஒரு கருத்தாக்கத்தை குறிப்பிடுகிறார். உழைப்பு என்பது ஒரு மனிதன் தன்னுடைய ஆற்றல்கள், உந்துதல்,இலக்குகளை புறபொருட்களின் மீது செலுத்தி அதை தன் வயமாக்குவதில் தான் உள்ளது. இந்த செயல்முறையில் அவனை அவனே கண்டடைந்து,அவனுடைய சுயத்தை அவனே கட்டமைப்பதன் வழியாக உலகை படைக்கின்றான்.
இதனை ஒட்டி ஹெகலின் கருத்துக்களை பார்க்கலாம். மனிதன் என்பவன் இயற்கை பிறவி அன்று,அவன் சுய பிரக்ஞை உள்ள தனக்காக இருக்கும் ஒரு பிறவி (being-for-self).அவன் சிந்திக்கும் பிராணி என்பதால் இயற்கை பிறவிகள் - அதாவது பிற ஜீவராசிகள் - அவனால் ஒற்றை தன்மையுடனும் வெறும் உள்உந்துதலுடனும் இருக்க முடியாது.மனிதன் அவனை அவனே நகல் எடுத்துக்கொண்டு அவனை அவனே பார்க்கின்றான் பிறகு அவனையே இயற்கையின் ஊடாக படைக்கும் பொருட்களின் ஊடாக பிரதிநிதித்துவ படுத்திக்கொள்கின்றான்.
இயற்கையுடன் ஒன்றி உருவாக்கும் ஒரு படைப்பை அவன் படைத்தவுடன் அதில் இருந்து அந்நியப்பட்டு அதை தூக்கி எறிந்துவிட்டு அடுத்த பொருளை உருவாக்கும் நாட்டம் கொண்டவனல்ல மனிதன். ஒவ்வொரு படைப்பு படைக்கப்படும்போது அவனுடைய மன நிறைவை ஒத்திபோட்டு வைக்கின்றான்.இந்த ஒத்திப்போடுதல் படைப்பாளிக்கு முக்கியமானது. ஒரு பொருளை அணுஅணுவாக செதுக்குவதில் பொறுமைகாத்து,அதை பாதுகாத்து சில நாட்கள் ஒத்திபோட்டு அதில் இருந்து ஒதுங்கி பிறகு அதை தீவிர அசையுடன் இல்லாமல் அந்த பொருளுக்கு சுதந்திர தன்மையை உருவாக்கும் வகையில் அந்த படைப்பை மேற்கொள்கின்றான்.
கலை செயல்பாட்டை ஹெகல் முன்னிருத்துகிறார்.கலை படைப்பு லௌகீக தேவைகளுக்காக உருவாக்கப்படுவதில்லை.அது நுகர்வு பொருள் இல்லை.அதை படைத்து அதன் போக்கிலேயே நிலவ விடுவது முக்கியமானது.விலங்குகளால் இது போன்ற கலை படைப்புகளை மேற்கொள்ள முடியாது.விலங்குகள் சுதந்திரமான உயிரினங்கள்இல்லை.அது உள்உந்துதல்களால் தேவைகளைஒட்டி இயங்கி வருபவை.ஹேகலுடைய இந்த கருத்துடன் மார்க்ஸீம் ஒத்துபோகிறார்.
அடுத்து,உழைப்பில் இருந்து உழைக்கும் மக்கள் அந்நியப்படுவது. பலர் சொல்வதை கேட்டிருப்போம்.தினமும் வேலை எப்படா முடியும் என்று காத்திருப்பார்கள்.அந்த பத்து மணி நேர வேலை முடிந்தவுடன் நேராக மது விடுதிக்கோ அல்லது ஏதாவது பிற பொழுதுபோக்கு அம்சங்களை தேடி அலைவார்கள்.அவர்கள் பிழைப்புக்காக மட்டுமே அந்த வேலையை வேண்டா வெறுப்பாக செய்வார்கள்.இதை தான் மார்க்ஸ் குறிப்பிடுகிறார்.
முதலாளியம் மனிதர்கள் மேல் சுமத்தப்பட்ட இந்த யந்திரகதியான வேலை முறையில் இருந்து விடுபற்றால் மட்டுமே அந்நியமாதலை கடக்க முடியும்.சிலர் வேலை முடிந்து களைப்புடன் வீட்டுக்கு சென்றவுடன் கணவன்/மனைவி ,குழந்தைகளை கவனிக்காமல் தூங்கிவிடுவார்கள்.அடுத்த நாள் எழுந்து வேலைக்கு செல்வார்கள். அவர்களுடைய வாழ்க்கை மனித தன்மை இழக்கப்பட்டு இயந்திரமாக மாறிவிடுவதை பார்க்க முடியும்.இதை எஸ்.வி.ராஜதுரை தெளிவாக குறிப்பிடுவதை காண முடியும். 'மனித வாழ்க்கை பொருள் இழந்தது,பொருட்கள் வாழ்க்கை பெற்றது'.
மேலும் உழைப்பாளர்கள் பிற உழைப்பாளர்களிடம் இருந்து அந்நியப்படுவது. இன்று மனிதர்களுக்குள் நிலவும் உறவுகள் பெரும்பாலும் பொருட்களின் பரிமாற்றத்தை சார்ந்து தான் இருக்கிறது.இந்த முதலாளிய சமுதாயம் மனிதர்களை பிளவு படுத்துவதில் இருந்து அவர்களை தனிமை படுத்துவதை சாதிக்கிறது.
அக்கம்பக்கத்தில் இருப்பவர்களை கூட விரோதிகளாக பார்க்கும் மனப்பான்மையை உருவாக்கி வைத்திருக்கிறது.இந்த வர்க்க பிரிவினை இயல்பாகவே இருவேறு ஆசைகளை உருவாக்குகின்றது. ஒரு கூட்டத்தார் மற்றொருவரை சுரண்டுகிறவரை இந்த பிரிவினை கலைய சாத்தியமில்லை.
Paul Schrader எடுத்த Blue collar படம் உழைப்பாளர்களுக்குள் ஏற்படும் சுய நலம்,சுரண்டுதல்,இறக்கமற்ற தன்மை,பணத்துக்காக என்னவேண்டுமானாலும் செய்யும் நிலைக்கு செல்வது போன்ற முதலாளிய சமுதாயம் உருவாக்கி இருக்கும் நிலைமைகள் தெளிவாக காட்சி படுத்திய படம்.
ஒரு கார் உற்பத்தி தொழிற்சாலையில் வேலைபார்க்கும் மூன்று நபர்களுக்குள் ஏற்படும் சிக்கல் இந்த படத்தில் முக்கியமானது. அவர்களுடைய சுய நலம், பிற மனிதர்களை - தன்னுடைய நண்பர்களை கூட - தன்னுடைய உயர்வுக்காக கவிழ்த்துவிடும் நிலைக்கு செல்வதை பார்க்க முடியும்.மூன்று நெருங்கி நண்பர்கள் எவ்வாறு இந்த முதலாளிய விளையாட்டுகளால் பிரிந்துவிடுகிறார்கள் என்பது தான் கதை.
முதலாளியம் வைக்கும் முக்கியமான போலி பிரச்சாரமாக 'மனிதர்கள் இயல்பிலேயே போட்டி குணம் கொண்டவர்கள்,பேராசைக்காரர்கள்,சுய நலம் பிடித்தவர்கள்.அதனால் நீ ஜெயிப்பதில் மட்டும் கவனமாக இரு.பணம் மட்டுமே வாழ்க்கை.' என்பதை காணலாம்.
மானுட சாரத்தை மார்க்ஸ் தெளிவுபடுத்துகிறார்.மனிதன் பேராசைக்காரன்,ஆண்கள் எல்லாம் காமக்கொடூரர்கள்,பெண்கள் அனைவரும் மனதளவில் பலவீனமானவர்கள் என்று ஒரு குறிப்பிட்ட வரலாற்று சூழலில் அல்லது திட்டமிட்டு உருவாக்கப்பட்ட சமூக சூழலில் இருந்து ஒருவரது சாரத்தை தீர்மானிக்க முடியாது. மனித சாரம் பிறக்கும்போது உடலுடன் ஒட்டிக்கொண்டு வருவது கிடையாது.அவன் தன்னுடைய படைப்பு செயலின் மூலமாக அவனுக்கான சாரத்தை அவனே உருவாக்கிக்கொள்கிறான்.இதை சார்த்தர் existence precedes essence என்று குறிப்பிடுகிறார்.
சுய அந்நியமாதல் :
முதலாளித்துவத்தின் வேலை முறையால் தனி மனிதர்கள் உளவியல் ரீதியாக பாதிக்கப்படுவதை நாம் பார்க்க முடியும். உழைப்பாளர்களின் உடல் அமைப்பே அவர்கள் செய்யும் வேலை முறையினால் மாற்றத்திற்குள்ளாகிறது. working class goes to heaven என்கிற படத்தில் வரும் கதாநாயகன் ஒரு பெரிய தொழில் பட்டறையில் வேலை செய்கின்றான். அவன் தினமும் ஒரே விதமான வேலையை செய்து வருகின்றான். ஒரு மணி நேரத்திற்குள் அவன் குறிப்பிட்ட அளவில் அந்த வேலையை செய்து முடிக்க வேண்டும். எடுத்துக்காட்டாக உணவு பொருட்களுக்கு பொட்டலம் கட்டும் வேலையை ஒருவர் செய்வாரெனில் அவர் மணி நேரத்துக்கு 120 பொட்டலங்களை கட்டியாக வேண்டும் என்பது விதி. தினமும் 10 மணி நேரமும் ஒருவன் பொட்டலம் கட்டிக்கொண்டே இருந்தால் அவனுக்கு என்ன ஆகும் ? அவனை அவனே மனிதனாக உணர மாட்டான். மன ரீதியாக அவன் பாதிப்புக்குள்ளாவான்.
இது போன்ற தொழில் முறை பாதிப்புகளால் Cognitive Behavioural Therapy என்கிற நடத்தை சார்ந்த மனநல சிகிச்சை இங்கிலாந்தில் பிரபலம் ஆகின்றது. CBT சிகிச்சை முறையை பொறுத்தமட்டில் ஒருவருடைய நடத்தையை மாற்றி அமைப்பதினால் அவர்களுடைய சிந்தனையும் மாற்றம் அடையும் என்பது அந்த சிகிச்சை கொடுக்கும் பலன். ஆனால் இது போன்று தினமும் ஒரே வேலையை ஒரே முறையில் 10 மணி நேரம் செய்பவன் எவ்வாறு தன்னுடைய நடத்தைகளை மாற்றிக்கொள்ள முடியும் ?
மெல்வின் சீமன் என்கிற அமெரிக்க சமூகவியலாளர் ‘On the Meaning of Alienation’ என்று சமூக விலகல் பற்றி தன்னுடைய ஆய்வுஅறிக்கையை 1959ஆம் ஆண்டு வெளியிடுகிறார். அதில் அந்நியமாதலை ஐந்து அம்சங்களாக பிரிக்கிறார்.
முதலாவது , சக்தியற்ற நிலை : நான் செய்யும் எந்த செயலும் பிறரின் மேலும் சமூகத்தின் மேலும் எந்த விதமான தாக்கத்தையும் ஏற்படுத்துவதில்லை என்று உணரும் நிலையே சக்தியற்ற நிலை.
அர்த்தம் இழந்த நிலை : இன்று இருக்கும் உலக நடவடிக்கைகள் அனைத்தும் எனக்கு அர்த்தமற்றதாக தெரிகிறது. இங்கு நடப்பவைகளை என்னால் சரிவர புரிந்துகொள்ள முடியவில்லை. தான் செய்யும் செயல் எந்த வகையில் இந்த உலகில் அர்த்தத்தை சேர்க்கின்றன,என் வாழ்க்கைக்கு அர்த்தத்தை சேர்க்கின்றன என்பது புரியாத நிலை இது.
சமூக நெறி இல்லாமை : சமூகம் உருவாக்கி வைத்திருக்கும் அற நெறிகளுக்கு தன்னை ஒப்பு கொடுக்க முடியாமல் அதில் இருந்து விலகி அதற்கு எதிராக தன்னை நிறுத்திக்கொள்ளும் நிலை இது. பெரும்பாலான மக்கள் பார்க்கும் தொலைக்காட்சி தொடர்கள்,கேளிக்கை செயல்கள் அனைத்தில் இருந்தும் ஒதுங்கி இருக்கும் நிலை இது.
தனிமைப்படுத்துதல்: ஒரு மனிதன் தன்னுடைய சுயத்தை அடையாளப்படுத்த முடியாமல், அடுத்தவர்களுடன் ஒன்றி இயங்காமல்,நண்பர்களுடனும் பிற நெருக்கமான சொந்தங்களுடனும் இருந்து தன்னை தனிமைப்படுத்திக்கொள்ளும் நிலை.
சுய அந்நியமாதல் : இது தன்னில் இருந்தே தனிமைப்பட்டுக்கொள்வது. తనకు என்ன பிடிக்கும்,என்ன தேவை,எதனால் இவ்வாறு இருக்கிறேன் என்கிற நிலை.
அந்நியமாதலினால் மனிதனுக்குள் பல வகையான சீர்குலைவு ஏற்படுகிறது. குடும்பம், நண்பர்கள்,சுற்று சூழல்,கடவுள்,இயற்கை,தன்னுடைய வரலாறு,உணர்வு பரிமாற்றம்,மதிப்பீடுகளில் இருந்து தன்னை துண்டித்துக்கொள்வதினால் அவனுக்கு அறமற்ற, தன்னிலை இழந்து(depersonalization),தனிமைப்பட்டு,எப்போதும் ஒரு வகையான பதற்ற நிலையுடன் சமூகத்துடன் ஒன்றி வாழ முடியாத நிலையிலேயே இருப்பான். வண்ணநிலவன் அந்நியமாகாமல் இருப்பது பற்றி தன்னுடைய ‘மெய்ப்பொருள்’ என்கிற கவிதையில் வெளிப்படுத்துகிறார்.
எதையேனும் சார்ந்திரு
கவித்துவம் தத்துவம்,
காதல் இங்கிதம்,
சங்கீதமிப்படி.
எதன் மீதேனும் சாய்ந்திரு
இல்லையேல் உலகம்
காணாமல் போய் விடும்.
தேவதச்சனின் கவிதை :
என் நூற்றாண்டு
துணியால் வாயைப் பொத்தி
அழுதபடி ஒரு பெண் சாலையில்
நடந்து போகிறாள்
என் பஸ் நகர்ந்து விட்டது.
படிவங்களை நிரப்பத்
தெரியாமல் ஒரு முதியவர்
மருத்துவமனையில் திகைத்து நிற்கிறார்
என் வரிசை நகர்ந்து விட்டது.
தண்டவாளத்தில் ஒரு இளைஞன்
அடிபட்டு தண்ணீர் தண்ணீர் என்று
கையசைத்துக் கொண்டிருக்கிறான்
என் டிரெயின் நகர்ந்து விட்டது
எவ்வளவு நேரம்தான்
நான் இல்லாமல் இருப்பது
எவ்வளவு முடியுமோ அவ்வளவு நேரம்
இருபத்தொன்றாம் நூற்றாண்டு
எ
ஜெ.டி.சலிங்கர் எழுதிய The Catcher in the Rye நாவல் அந்நியமாதலைப் பற்றி வந்த படைப்புகளில் மிக முக்கியமானவை. அந்த நாவலில் வரும் 16 வயது இளைஞன் ஹோல்டன் என்பவனைப் பள்ளியிலிருந்து வெளியேற்றிவிடுகிறார்கள். அவன் நேரடியாக வீட்டுக்கு செல்லாமல் மூன்று நாட்கள் நகரத்திலேயே தன் கையில் இருக்கும் பணத்தை வைத்து சுற்றி திரிந்துகொண்டிருக்கிறான். ஹோல்டன் கதாபாத்திரம் பல இளைஞர்களை அன்று கவர்ந்திருந்தது.
இந்த நாவல் இரண்டாம் உலகப்போருக்குப் பின்பு உருவான சமூகத்தில் நிலவிய நம்பிக்கையற்ற தன்மையை இளைஞர்கள் வழியாக காட்சிப்படுத்தியது. அந்த காலகட்டத்தில்தான் ‘பீட் ஜெனரேஷன்’ வளர்ந்து வந்துகொண்டிருந்தது. பொது நம்பிக்கைகள், முதலாளிய எதிர்ப்பு, அறநெறியற்ற சூழல், செக்ஸ், போதைப்பொருட்கள் என்று பல வகையான சமூக மீறல்களைக் கலை வழியாக நிகழ்த்தி காட்டினார்கள் பீட் கலைஞர்கள்.
அந்த நாவலில் வரும் ஹோல்டன் தன்னை இடத்துக்கு ஏற்றவாறு மாற்றிக்கொள்கிறான். சிலரிடம் அன்பாகக் காணப்படுவான், சிலரைத் தூற்றுவதிலே நேரத்தைக் கழிப்பான். அவனுக்குப் பெரும்பாலானவர்கள் போலிகளாகத் தெரிவார்கள். சில நேரங்களில் ஹோல்டன் தன்னையே வெறுத்துக்கொள்வான். நான் ஏன் இங்கு இவ்வாறு நடந்துகொண்டேன், நான் ஏன் இப்படி இருக்கிறேன் என்று குழப்ப மன நிலையை அவனிடம் இருக்கும். சார்த்தரின் nausea என்கிற நாவலில் சுய அந்நியமாதலை மிக ஆழமாகக் காணமுடியும்.
‘I tear myself away from the window and stumble across the room, I am ensnared by the mirror, I look at myself, I disgust myself: another eternity. Finally I escape from my image and I go and throw myself on my bed. I look at the ceiling, I shoul
தொழில்துறைக்கு பிந்தைய சமூகம் :
தொழில்துறைக்கு முந்தைய சமூகத்தில் மனிதர்கள் வேலைகளை தங்கள் இஷ்டம் போல் நேரம் ஒதுக்கி தனது வீடுகளில் இருந்தவாறே செய்து வந்தனர்.ஆனால் உற்பத்தியின் அளவு கணிசமாகவே காணப்படுவதால் தொழிற்சாலைகளை கட்டி தினமும் அங்கே வந்து வேலை பார்க்கும் முறையை கொண்டு வந்தார்கள்.அடாவடியான ஒழுங்கு,நேரம் கடைபிடிப்பு,கடுமையான கட்டுப்பாட்டுக்குள் தங்களை பலியிட்டு கொண்டனர் தொழிலாளர்கள்.இந்த முறையில் ஏற்படும் சுரண்டல்களையும்,பிற பிரச்சனைகளையும் தான் மார்க்ஸ் ஆராய்ந்தார்.அதாவது தொழிற்சாலையில் வேலைபார்க்கும் முறை.
ஆனால் பின் தொழில்துறை சமூகத்தில் அனைத்தும் தானியங்கிகளாகவும் கணினிமயமாக்கப்பட்டதாகவும் மாறியது மார்க்ஸின் கருத்துகளை காலவதி ஆக்கிவிட்டதாக சிலர் குறிப்பிடுவதை பார்க்க முடியும்.இன்று காணப்படும் வேலைகள் பெரும்பாலும் சேவைத்துறை,அரசு அலுவலகத்திலும், மற்றும் தகவல் தொழில்நுட்பம் சார்ந்தும் இயங்குகிறது.
முன்பு தொழிற்சாலைகளில் காணப்படும் கடின உழைப்பு இன்று இருக்கும் தொழில்முறையில் இல்லையென்றாலும் சுரண்டுதலும்,அந்நியமாதலும் அதை விடவே அதிகமாக காணப்படுகிறது.
முன் தொழில்துறை சமூகத்தில் இருப்பது போல் பெரியப் பெரிய இயந்திரங்களை வைத்து வேலை செய்வது மட்டுமே அந்நியமாதலை உண்டு செய்யும் என்று சொல்லிவிட முடியாது.இயந்திரம் முக்கியமில்லை. அந்த இயந்திரம் ஒரு மனிதனை என்னவாக மாற்றுகிறது, எவ்வாறு செயல்படவைக்கிறது,அவனுடைய வாழ்க்கையின் மேல் அது செலுத்தும் ஆதிக்கம் என்பதை தான் கவனிக்க வேண்டும். இதை Immaterial labour என்று குறிப்பிடலாம். முன்பு இருந்த நிலைமைகளில் இருந்து இன்றைய நிலைமை பெரிதாக எந்த வித்தியாசமும் அடையவில்லை.வேலைக்கு உட்படுத்தும் பொருட்கள் மட்டுமே மாற்றம் அடைந்திருக்கிறது.இருப்பினும் வாகன உற்பத்தி செய்யும் இடங்களில் கம்ப்யூட்டர்மயமாக்கிவிட்ட பின்பும் பழைய முறை ஆள்வளமும் தேவைப்படுகிறது.
ஐ.டி துறையில் வேலை பார்ப்பவர்கள் தங்களை சுதந்திர பிறவிகளாக உணர்வதை நம்மால் காண முடியும்.அதை சுய சூழ்ச்சி என்றே சொல்ல முடிகிறது.முன் தொழில்முறை சமூகத்தில் தான் அந்நியமாவது வெளிப்படையாக ஒருவனுக்கு புலப்படும். ஆனால் இன்று இருக்கும் தகவல் தொழில்துறையில் அவனுடைய அந்நியமாதல் பிற கேளிக்கை விஷயங்களால் போர்த்தி மறைக்கப்படுகிறது.
முன்பு குறிப்பிட்டது போல் வேலை முடிந்தவுடன் எதோ ஒரு மது விடுதிக்கோ, திரைப்படத்துக்கோ, அல்லது ஏதேனும் ஒரு கேளிக்கையில் தன்னை ஈடுபடுத்திக்கொள்கிறான்.அவனுக்கு தேவை மாதம் தான் உயிர் வாழ்வதற்கு தேவையான , அந்நியமாதலை மறைக்க இந்த முதலாளிய சமூகம் உருவாக்கி வைத்திருக்கும் பல வகையான கேளிக்கைகளில் ஈடுபட ஒரு குறிப்பிட்ட சம்பளத் தொகை. அது கிடைத்தவுடன் ஒரு ஐ-போனை வாங்குகிறான்.இந்த ஐ-போனுக்காக உழைக்க ஆரம்பிக்கின்றான். அது புது மாடலை வெளியிடுவது வரை காத்துக்கொண்டிருந்து அதை இ.எம்.ஐ யில் வாங்கி கடன் படுகிறான்.அதற்காக கழுதையாக உழைக்கின்றான்.கடைசியில் செத்தும் மடிகின்றான். முதலாளித்துவ சக்திகள் காசுக்காக உற்பத்தி என்பதை தாண்டி உற்பத்திக்காக உற்பத்தி என்கிற நிலையை தொட்டுவிடுகிறது.
மனிதர்கள் அலுவலக வேலை தவிர்த்து அவர்களுக்கு கிடைக்கும் ஓய்வு நேரங்களில் இசை உருவாக்குவது,குறும் படம் எடுப்பது,ஓவியம் வரைவது,எழுதுவது போன்ற படைப்பு செயல்களில் ஈடுபடுவார்கள்.ஆனால் இதை ஆக்க வளமற்ற அதாவது செயலூக்கமற்ற(passive) படைப்பு செயலாகத்தான் பார்க்க முடியும்.இந்த உயிர்பற்ற படைப்பு செயலை வேலை நேரங்களுக்கு இடையே செய்வதினால் இதை பொழுதுபோக்கு என்கிற இடத்தில் வைத்திருக்கிறார்கள்.
இதை சாதகமாக பயன்படுத்திக்கொள்ளும் பொழுதுபோக்குத்துறை லாபகரமான கேளிக்கை சந்தைகளை உருவாக்குகிறது. ஒரு பக்கம் கடினமாக தன் வாழ்க்கையை நடத்தும் கூலி உழைப்பாளியானவன் மறுபக்கம் செயலூக்கமற்ற கேளிக்கையில் மூழ்கி விடுகிறான்.இவை இரண்டும் அவனை உயிருள்ள மனிதனாக இருக்க விடுவதில்லை.
பின் தொழில்துறை முதலாளித்துவ நிலையில் அந்நியமாதல் கொடூர உருவெடுப்பதை காணலாம்.நிலபிரபுத்துவ சமூகத்தில் எஜமான் தனக்கு தேவையான பொருட்களை அடிமை உழைப்பாளிகளை வைத்து ஈட்டிவிட்டு நிறுத்திக்கொள்வான். ஆனால் இன்று இருக்கும் முதலாளிகள் தொடர்ச்சியக தன்னுடைய போட்டியாளர்களை முறியடிக்க வேண்டிய கட்டாயத்தில் ஈடுபடுபவர்கள்.ஒவ்வொரு பொருளையும் எவ்வாறு வடிவமைப்பது என்றும், மலிவாக அதே நேரம் விரைவான உற்பத்தி முறையில் மட்டுமே கவனம் செலுத்துவார்கள்.
கால் சென்டரில் வேலை பார்ப்பவர்கள் சரியான நேரத்திற்கு அவர்களுடைய கை அச்சை பதிவு செய்ய வேண்டும்.தேனீர் இடைவெளியில் ஊழியன் பதினைந்து நிமிடங்களை தாண்டியும் வேலைக்கு திரும்பவில்லை என்றால் சம்பளப்பிடிப்பு.தன்னை தொடர் இயக்கத்தில் வைத்திருக்கும் முதலாளிய நிறுவனங்கள் இரவு நேரப்பணியையும் முதன்மைபடுத்துவார்கள்.
சவுத் கொரியன் படமான பாராசைட் வர்க்க மோதல்களை மையப்படுத்தி எடுக்கப்பட்ட மிக அற்புதமான படைப்பு.
படத்தின் ஆரம்பத்திலேயே கிம் குடும்பத்தின் வறுமை சூழல் பளிச்சிட வெளிப்படும்.கிம் குடும்பத்தில் அனைவரும் பீசா பாக்ட்ஸ் மடித்து தரும் வேலையில் ஈடுபடுவார்கள்.அந்த வேலை செய்வதில் கூட போதுமான அளவுக்கு அவர்களிடம் சாமர்த்தியம் இருக்காது.
உணவுக்காக மனிதர்கள் எந்தளவு தன்னுடைய வருமானத்தில் செலவளிக்கின்றனர் என்பதை பொருதே ஒரு குடும்பத்தின் வறுமை சூழலை புரிந்துக்கொள்ள முடியும்.அது போன்று கிம் குடும்பம் இலவச உணவு கூடங்களில் உணவு உண்கின்றனர்.
தொழிற்சாலையில் முன்பு கணவன் வேலைக்கு செல்வான்,பின்பு மனைவியும் வறுமை சூழலால் வேலைக்கு செல்ல வேண்டிய நிர்பந்தம் ஏற்படும்.அவர்களுடைய குழந்தைக்கு பயிற்சி கொடுத்து அவர்களையும் வேலைக்கு எடுத்துக்கொள்ளும் தொழிற்சாலை.ஆக மொத்தத்தில் ஒரு குடும்பமே ஒரு தொழிற்சாலைக்காக தன்னுடைய வாழ்க்கையை தியாகம் செய்யும்.அது போன்று பாராசைட்டில் வரும் கிம் குடும்பம் முழுக்க பணக்காரரான லீ குடும்பத்துக்கு வேலை செய்கின்றனர்.
கிம்மை பொறுத்தவரை அவனுடைய சுயம் இரண்டு வகையாக பிரிந்து இருக்கும்.உள்ளுக்குள் சிறிய மனிதபிமானமும் வெளியே பணக்காரன் ஆக வேண்டும் என்கிற தவிப்பும் காணப்படும்.இந்த இரட்டை பிரக்ஞை நிலை முக்கியமான அடையாள சிக்கலுக்கு கொண்டு செல்லும்.
கிம்மின் மகளின் சூழ்ச்சியால் கார் டிரைவரை மாற்றிவிட்டு கிம் கார் டிரைவராக பணியில் பொறுத்தப்படுவான்.லீ குடும்பம் ஊருக்கு சென்ற பிறகு கிம் குடும்பமே உட்கார்ந்து சாராயம் குடித்துக்கொண்டிருக்கும்போது கிம் தன் மகனிடம் தன்னால் ஏமாற்றப்பட்ட டிரைவரை பற்றி அக்கறையாக விசாரிப்பான். அந்த குற்ற உணர்வு அவனுள் இருக்கும்.அடுத்த காட்சியில் அடித்தளத்தில் ஒழிந்துக்கொண்டு இருக்கும் தன் கணவனுக்கு முன்னால் வேலைக்காரி சாப்பாடு கொடுக்கும் காட்சியில் அந்த வேலைக்காரியை எஜமானன் போல கடுமையாக பேசுவான் கிம். ஒரே நேரத்தில் பணக்காரனாகவும் ஏழையாகவும் இருக்கிறான்.
கிம் குடும்பமே சூழ்ச்சி,ஏமாற்றுவது என்று போலிகளாக உருவாகி வருவார்கள். மேல் இருப்பவனை அடித்து சாப்பிட்டு அவன் இடத்தை பிடித்துக்கொள்வதை இயல்பான குணமாக கட்டமைத்திருக்கும் முதலாளிய பொது புத்தியில் இருந்து தப்பிக்க இவர்களுக்கு மட்டும் என்ன சலுகையா இருக்கிறது ?
கடன் தொல்லைகளால் அந்த வீட்டின் கீழ் அடுக்கில் மறைந்து இருப்பவன் தன்னுடைய முதலாளி எப்போதெல்லாம் படிக்கட்டில் ஏறி வருகிறானோ அப்போதெல்லாம் கீழ் இருந்து அவனுக்கு மரியாதை செலுத்தி லைட் சுவிட்சை தட்டிக்கொண்டிருப்பான். தன்னுடைய முதலாளியை நேரில் பார்க்காத ஒரு கார்ப்பரேட் ஊழியனின் வாழ்க்கை தான் இதுவும்.கீழ் அடுக்கில் மறைந்து இருப்பவனை பார்த்து கிம் ‘ எப்படி இந்த இடத்துல வாழுற’ என்று கேட்கும்போது ‘எனக்கு இது சுகமாக இருக்கிறது, ஏதோ நான் இங்கு தான் பிறந்தேன் என்பது போல உணர்கிறேன் ‘ என்று பதிலளிப்பான்.
ஒரு பேயை போல தான் வாழ்ந்து வருவான்.அந்த கீழ் அடுக்கு பேயை ஒரு முறை நடு இரவில் கேக் சாப்பிடும்போது பார்த்த அந்த சிறுவன் அதிர்ச்சியில் பிறகு ஓவியம் வரைவதில் ஈடுபடுவான். அவன் வரையும் ஓவியமே கீழ் அடுக்கில் இருப்பவனின் தோற்றம் போல காணப்படும்.அவனுக்கு ஓவிய பயிற்சி கொடுக்கத்தான் அதே கீழ் நிலையில் இருக்கும் கிம்முடைய பெண் வருவாள்.
ஒரு வகையில் கீழ் அடுக்கில் இருப்பது அந்த வேலைகார பெண்ணின் கணவன் என்று பார்க்காமல், அவளுடைய இரட்டை சுயத்தில் ஒன்று கீழே மோசமான வாழ்க்கையை வாழ்ந்து வருகிறது. அது மேல் அடுக்குக்கு வருவதற்கு தவியாய் தவிக்கின்றது. ஆனால் அதனால் வர இயலவில்லை என்று பார்க்கலாம். படத்தின் இறுதியில் கிம் அந்த வீட்டின் கீழ் அடுக்கில் மறைந்து வாழுவான்.அவனுடைய மகன் பணம் சம்பாரித்து கீழ் அடுக்கில் இருந்து தன்னுடைய அப்பாவை மேல் அடுக்குக்கு வர வைப்பதே என் குறிக்கோள் என்று நினைத்துக்கொள்வான்.கீழ் அடுக்கில் இருப்பவர்கள் மட்டுமே அந்நியமாதலை அனுபவிக்கின்றனர் என்று முடிவு செய்துவிட முடியாது.
மேட்டுக்குடி சமுதாயமும் - அவர்களுக்கு பணம் பிரச்சனை இல்லாவிட்டாலும் - எதோ ஒரு வகையில் அந்நியமாகிறார்கள். அவர்களுடைய பணம் ஈட்டும் வெறி, தேவையை கடந்த பல போலியான பல பொருட்களை உற்பத்தி செய்துவிட்டு அதுக்கு மதிப்பும் உண்டாக்கிவிட்டு மக்களை வாங்க வைத்துவிட்டு அவர்கள் தயாரித்த அதே போலிகளை மேட்டுக்குடிகளும் பயன்படுத்துவதை பார்க்க முடியும்.
இந்த படத்தை பொறுத்தமட்டில் அந்த இரு அடுக்குகளுக்கும் நடுவில் உண்டாகி இருக்கும் பிளவு தான் பிரச்சனையேயொழிய அதில் வசிக்கும் மனிதர்கள் இல்லை.
சிறுவயதில் நம்முடன் நெருக்கமாக இருந்த நண்பன், வயது முதிர்ச்சிப்பின் அவனைச் சந்திக்கும்போது அவனிடம் என்ன பேசுவதென்று தெரியாத ஒரு சூழலை எல்லோரும் எதிர்கொண்டிருப்போம்.இருவருக்குள்ளும் இருந்த பரஸ்பர நம்பிக்கை, அன்யோன்யம்,அன்பெல்லாம் மங்கி இருப்பதை நம்மால் உணர முடியும்.அவன் வகுத்துக்கொண்ட பாதை,அவனுடைய சிந்தாந்தம்,உலகம் பற்றியான பார்வை,விருப்பு,குறிக்கோள்கள் அனைத்தும் நம்முடையதில் இருந்து பெரிதாக வேறுபட்டு காணப்படும்.
நமக்கு நெருக்கமானவர்கள் நம்மிடம் இருந்து அந்நியப்பட்டுப் போகும் இடத்திலிருந்து - வர்க்கப் பகுப்பிலேயே - ஒருவன் அந்நியமாதலை உணர்கிறான்.
மார்க்ஸின் சிந்தனை சமூகத்தில் செயல்படுத்தப்பட்டால் அந்நியமாதலை வென்று வர இயலுமா என்று தெரியவில்லை. ஆனால் மார்க்ஸின் சிந்தனை அந்நியமாதலை புரிந்துணர்வதற்கு வழி காட்டியா அமைந்திருக்கிறது. ஒருவன் தன்னுடைய அந்நியமாதலை உணர்ந்துகொள்ளும் நொடியில் அவன் அதில் இருந்து விடுபடவும் வழி தேடுவான்.
- இந்த கட்டுரை 2023ஆம் ஆண்டு எழுதப்பட்டது. -






Comments
Post a Comment