Esthappan - A Man with Thousand Faces


அரவிந்தனின் Esthappan ஒரு தனிமனிதனைப் பற்றிய கதை என்பதை விட அது ஒட்டுமொத்த சமூக மனதின் பிரதிப்பலிப்பு என்று கூறுவதே இங்கு பொருத்தமானதாக இருக்கும்

யாரும் எஸ்தப்பனை நேரடியாக அறிமுகப்படுத்துவது இல்லை. ஒவ்வொருவரும் தங்களுடைய எஸ்தப்பனைச் சொல்கிறார்கள். அது பெரும்பாலும் அவர்கள் கேட்டவையோ அல்லது பார்த்தவையோதான். திருடனுக்கு அவன் கருணை உள்ளவனாகவும், குழந்தைகளுக்கு அவன் அற்புதம் நிகழ்த்துபவனாகவும், சிலருக்கு அவன் புனிதராகவும், மற்றும் சிலருக்கு அவன் வித்தியாசமானவனாகவும் வெளிப்படுகிறான்.சிலர் அவனை திருடனாகவும் போலியானவன் என்றும் ஒதுக்கி வைக்கிறார்கள். இவை அனைத்தும் ஒரே மனிதனைப் பற்றிய வெவ்வேறு கதைகள்.

அரவிந்தன் இங்கே ஒரு முக்கியமான விஷயத்தைச் சொல்கிறார். “மனிதர்கள் உண்மையை விடக் கதைகளோடு நெருங்கி வாழ்கிறார்கள்.”

ஒரு கதை, குறிப்பாக பல அடுக்குகளை பொதிந்து வைத்திருக்கும் ஒரு கதை, ஒரு சாதாரண நிகழ்வை அற்புதம் என்றும் சொல்லும்போது, அது வெறும் சம்பவமாக இருப்பதை நிறுத்திவிடுகிறது. அது ஒரு நம்பிக்கையின் அடையாளமாக மாறத் தொடங்குகிறது. புராணம் என்பது பொய் அல்ல; அது ஒரு சமூகத்தின் உளவியல் தேவையின் வெளிப்பாடு. மனிதர்கள் தங்களின் பயம், நம்பிக்கை, ஏக்கம், இழப்பு போன்றவற்றை ஒரே மனிதன் மீது பிரதிபலிக்கிறார்கள். அந்த மனிதர் மெதுவாக தனது தனிப்பட்ட அடையாளத்தை இழந்து, கூட்டு சிந்தனையின் குறியீடாக மாறுகிறார்.

இந்த எண்ணத்தை Joseph Campbell தனது The Hero with a Thousand Faces புத்தகத்தில் ஆராய்கிறார். அவரது பார்வையில், ஒரு புராணம் என்பது ஒரு சம்பவத்தின் உண்மையைப் பற்றி மட்டும் அல்ல; அந்தச் சம்பவத்திற்கு சமூகம் கொடுக்கும் இரண்டாவது அர்த்தத்தைப் பற்றியது என்று குறிப்பிடுகிறார். ஒரு நிகழ்வு நிகழ்ந்ததா என்பது மட்டுமல்ல, மக்கள் அதை எப்படிப் புரிந்துகொள்கிறார்கள் என்பதும் முக்கியம் என்கிறார்.

Esthappan இதை அப்படியே பிரதிபலிக்கிறது என்று நினைக்கிறேன். படத்தில் அற்புதங்கள் நடந்ததா இல்லையா என்பதை அரவிந்தன் ஒருபோதும் உறுதிப்படுத்தியதாகத் தெரியவில்லை. மாறாக, அற்புதங்களைப் பற்றி பேசும் மனிதர்களைக் காட்டுகிறார். அதனால் பார்வையாளர்களின் கவனம் எஸ்தப்பனிடமிருந்து கிராம மக்களின் மனநிலைக்கு மாறுகிறது.

இது மதத்தைப் பற்றிய படம் இல்லை. மாறாக, ஒரு நம்பிக்கை எப்படி உருவாகிறது என்பதைப் பற்றிய படம்.

மதம் ஒரு நிறுவனத்தால் மட்டும் இயங்கவில்லை; அது கதைகளின் வழியாக தன்னை தக்க வைத்துக்கொள்கிறது. ஒவ்வொரு தலைமுறையும் அதற்கு முந்தைய தலைமுறையின் கதைகளை மீண்டும் மீண்டும் சொல்லும் போது, அந்தக் கதைகள் மாறுகின்றன. 

இந்த எண்ணம் உளவியலிலும் முக்கியமானது. மனித மூளை முழுமையற்ற தகவல்களை நீண்ட நேரம் தாங்க விரும்புவதில்லை. விளக்கம் இல்லாத இடங்களில் அது தானாகவே ஒரு வடிவத்தை உருவாக்குகிறது. மேகங்களில் முகத்தைப் பார்ப்பது, சீரற்ற நிகழ்வுகளை விதி என்று சொல்வது, சாதாரண மனிதர்களில் புனிதர்களைக் காண்பது — இவை அனைத்தும் மனித மனதின் இயல்பான செயல்பாடுகள். 


Comments

Popular posts from this blog

வெர்ட்டிக்கல் சினிமா - புது அழகியலா ? புது வியாபாரமா ?

A Letter of Motivation by Benoit Rouilly

Contemplation Cinema Screening (FAQ)