பிணம் தேடுபவர்கள்
தமிழில் சிறுபத்திரிக்கை என்கிற ஒரு மரபு இருந்தது; இன்னும் தொடர்கிறது.
பெரிய முதலீடு, பரந்த வினியோகத்துடன் பெரும் வாசகப் பரப்பை மட்டும் இலக்காகக் கொண்டு தயாரிக்கப்படும் வியாபாரரீதியான பத்திரிகைகளுக்கு முற்றிலும் எதிராக, குறைந்த வாசகப் பரப்பைக் கணக்கில் கொண்டு, உறுதியான கொள்கைகளுடன், புதுமை மற்றும் சோதனை முயற்சிகளுக்கு இடமளித்து இயங்கிவரும் ஒரு மரபே சிறுபத்திரிக்கை என்கிறோம்.
உதாரணமாக மணிக்கொடி, சூறாவளி, கலாமோகினி, கிராம ஊழியன்,எழுத்து, கணையாழி போன்ற இதழ்களை குறிப்பிடலாம்.
இந்த பத்திரிக்கைகளின் நோக்கமாக புதுமையை பாராட்டுவது, பல உலக இலக்கியங்களை தமிழில் மொழிபெயர்த்து அறிமுகப்படுத்துவது, புதிதாக எழுத வருபவர்களை அணைத்துக்கொண்டு அவர்களை ஊக்கமளிப்பது என்று சொல்லலாம்.
‘எழுத்து’ என்கிற சி.சு. செல்லப்பாவின் பத்திரிக்கை சிறுபத்திரிக்கை இயக்கத்தின் தரத்தை மேலும் மேம்படுத்தியது. இது போன்ற சிறுபத்திரிக்கைகளை முன்னெடுத்தவர்கள் பெரும்பாலும் தீவிர எழுத்தாளர்களே.
விஷயம் என்னவென்றால், பெரும்பாலான சிறுபத்திரிக்கைகள் இருபது அல்லது ஐம்பது இதழ்களை கடந்தவுடன் நின்றுவிடும். சில பத்திரிக்கைகள் நான்கு அல்லது ஐந்து தான்.
இந்த முடக்கத்திற்கு முக்கிய காரணம் பணம் தான். இதை தாண்டி சில காரணங்கள் இருக்கலாம். இருப்பினும், பணம் பலவீனம் மட்டுமே இது போன்ற சிறுபத்திரிக்கை இயக்கங்களை காவு வாங்கியது.
சில சிறுபத்திரிக்கைகள் தன்னுடைய வாசக வெளியை பெரிதாக்க நினைத்தது.
இந்த சிறுபத்திரிக்கைகளை மாற்று சினிமா இயக்கங்களுடன் ஒப்பிட முடியும்.
ஆனால், சினிமா இயக்கங்கள் சிறுபத்திரிக்கைகள் அளவுக்கு தடம் தெரியாமல் மறைந்துவிடவில்லை. குறிபிடத்தக்க சில இயக்கங்கள் தீவிரமாக புது தலைமுறையினரிடம் ஆதரவை பெற்று இயங்கி விரைவில் மறைந்தும் போனது.
மக்களின் ஆதரவு இதுபோன்ற மாற்றுத் தீவிர இயக்கங்களுக்கு குறைவாகவே கிடைத்தது. மக்களின் தினசரி வாழ்வில் அவர்கள் நேர்கொள்ளும் அனைத்தும் வியாபார வெறிபிடித்து, நுகர்வை மட்டுமே நோக்கமாக வைத்து, பொழுதுபோக்கே கதி என்பதாகவும், அதிவேக நுகர்வே மகிழ்ச்சியின் வழி என்று நடைமுறையாகிவிட்டதினால், இதனை எதிர்த்து இலக்கியத்திலும், சினிமா மற்றும் பிற கலைத்துறைகளில் முளைத்துவரும் சிந்தனை மரபுகள் முளைத்த அடுத்த கணமே மரண தண்டனை விதிக்கப்பட்டது போல் உடனே மடிந்துவிடுகின்றன.
அந்த இயக்கங்களுடன் தன்னை அடையாளப்படுத்தி பார்த்துக்கொள்ளும் வாசகர்கள்/பார்வையாளர்களே ஆதரவு அளித்து தாங்கி பிடித்தார்கள்.
Play time என்கிற மிக முக்கியமான ஒரு கலைப்படைப்பை எடுத்த Jacques Tati “I had a house before ‘Playtime.’ I don’t have my house today,” என்று குறிப்பிடுகிறார்.
இது போன்ற பல கலைஞர்கள் கலைக்காக தன்னுடைய வீடு, சொத்து, உறவுகள் என்று இழந்துச, கடைசி காலத்தில் வறுமையிலும், மன உலைச்சல்களிலும் இருட்டடிப்பு செய்யப்பட்ட நிலையிலயே இறந்திருக்கிறார்கள்.
அதன் பின் வந்த தலைமுறைகள் சில படைப்பாளிகளின் பிணங்களை தோண்டி எடுத்து நடு வீட்டில் அமர வைத்து கலைச்சடங்கு செய்கிறார்கள்.
இவர்கள் ஏதேனும் வகையில் அதிர்ஷ்டசாலிகள். குறைந்தபட்சம் அவர்களுடைய பிணங்களுக்காவது மக்களிடத்தில் சமூக அங்கீகாரம் கிடைக்கிறது. ஆனால் காணாப்பிணமாக பல படைப்பாளிகள் மண்ணின் அடியில் சிக்கி, தோண்டவே முடியாமல், தேடினாலும் கிடைக்காமல் தொலைந்துவிடுவதையும் பார்க்கிறோம். இவர்களையும் நாம் கண்டடைய வேண்டும். இவர்களுடைய படத்திற்கு மாலைகள் அணிந்து மரியாதை செலுத்த வேண்டும்.
இந்த பிணம் தேடுதல் எந்த காலத்திலும் நிற்கப்போவதில்லை.

Comments
Post a Comment