மரணத்தில் முளைத்த உயிர்...

 




ஒரு நாட்டில் எதனால் நல்ல படைப்பாளிகள் உருவாகுகிறார்கள் என்ற அடிப்படைக் கேள்வியை எழுப்புகையில் அந்த நாட்டில் உள்ள சமூக, பொருளாதார, அரசியல் சூழல் உடனடியான தாக்கம் மற்றும் காரணியாக இருப்பதை பார்க்க முடிகிறது. ஆனால் தெரிந்தோ தெரியாமலோ அந்த நாட்டின் வரலாறும், பண்பாடும் அளவிட முடியாத தாக்கங்களை ஏற்படுத்துகின்றன. 


மேலை நாடுகள் என்ற பொதுப்படையான பெயர் போதுமானதாக இருப்பதில்லை. ஐரோபா-அமெரிக்க சினிமா அல்லது புத்தகங்கள், ஆசிய நாடுகளின் படங்கள் அல்லது புத்தகங்கள் இவற்றை ஒப்பிடும் போது எந்த அளவு ஒன்று இன்னொன்றை போல இருக்கிறது என்ற வினா எந்த அளவு முக்கியமோ,

அதே போல எதனால் ஒரு படமோ புத்தகமோ ஒன்று போல மற்றொன்று இல்லை என்ற கேள்வியும் மிகவும் முக்கியம். 


ஜப்பான் நாட்டின் ஆகச் சிறந்த படைப்பாளிகளின் பட்டியலில் பெயர்கள் ஏராளமாக இருக்கின்றன. 

பெரும்பான்மையான படைப்புகள் இரண்டாம் உலக போரிற்கு பிறகு ஏற்பட்ட அமெரிக்க ஆட்சி, அமெரிக்க பண்பாடு ஜப்பான் முழுக்க பரவியதால் ,  சொந்த நாட்டின் பண்பாடு கரைந்து போவதை கண்டு கொண்டவர்கள் தாம் எடுத்த படங்களில் பெரும்பான்மையாக தங்களுக்கு ஏற்பட்ட அடையாள சிக்கல்களை முன் வைத்து படங்கள் எடுத்தனர். 

அது மட்டுமல்லாமல் இரண்டாம் உலக போரில் ஏற்பட்ட அணுகுண்டு சம்பவத்தின் தாக்கங்களை படங்களாக எடுத்தனர். ஆனால் ஜப்பானில் நிலவி வந்த தணிக்கை விதிகளால் , பல இயக்குனர்கள் வரலாற்றில் பின் நோக்கி சென்று ஜப்பான் மன்னர் ஆட்சி, சாமுராய் வாழ்வு முறை , அப்போது நிலவி வந்த பழக்க வழக்கங்களை வைத்து தாம் தனித்தன்மை வாய்ந்தவர்கள், ஜப்பான் மீண்டு வர இயலும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்த முயன்றனர். ஒரு சிலர் nihilism எனப்படும் வாழ்க்கையை பற்றிய அர்த்தமின்மையை முன் நிறுத்தி படங்கள் எடுத்தனர். 




கொரீடா இவர்களுக்கு பின் வந்த புது தலைமுறை படைப்பாளி. அவர் எடுத்த மிக முக்கியமான படங்களில் குடும்பம் என்னும் நிறுவனத்தை முன் நிறுத்தி இருந்தன. 

மக்களின் அத்தியாவசிய தேவைகள், குடும்பத்தில் நிலவும் நம்பிக்கைகள், பிரச்சனைகள், உரையாடல்கள், மௌனங்கள் என எல்லாவற்றையும் பற்றி பேசிய படம் தான் still walking. 

2008 இல் வெளி வந்த இந்த திரைப்படம் 24 மணி நேரத்தில் நிகழ கூடிய கதை. கதைக்களம் ஒரு வீடு. 

ஒரு குடும்பத்தில் மூத்த மகனின் இறந்த நாள் அன்று , அம்மா அப்பா, மகள் - அவளுடைய குடும்பம் , இரண்டாம் மகன் - அவனுடைய குடும்பம் என அனைவரும் கூடி  நேரம் செலவிடும் போது நடப்பதே படத்தின் ஒரு வரி. 


இந்த கதையை பற்றி அல்லது அதனை பற்றிய பகுப்பாய்வு செய்யும் முன்பு, எதனால் இந்த படைப்பு முதலில் எடுக்கப்பட்டதாக கொரீடா கூறுகிறார். அவருடைய சொந்த வாழ்வில் ஏற்பட்ட சம்பவங்களை அடிப்படையாக வைத்து தான் இந்த படத்தை அவர் எடுத்ததாக பேட்டியில் கூறி இருப்பார். அவருடைய தாய் மரணிக்கும் போது அவரால் அந்த நேரத்தில் அங்கு இருக்க முடியாமல் போனது தான் மிக பெரிய தாக்கமாக கூறுகிறார். 

ஒரு சினிமா பார்வையாளன் தமிழ் வணிக சினிமா அல்லது இந்திய வணிக சினிமாவை நீண்ட நாட்களாக பார்த்து கொண்டு இருக்கிறார் என்று வைத்து கொள்வோம். ஆங்கில சினிமா பார்க்கிறார் என்றாலுமே, டிராமா வகை படங்கள் வேகமாக நகர கூடிய வகைகளே அதிகம் வருகின்றன. மக்களுக்கு தெரிகின்றன. இந்த படம் மெதுவாகத்தான் நகர்கிறது. எதனால் இப்படி இருக்க வேண்டும்?

இதன் கதை களமே எங்கு எங்கோ வேலைக்காகவும் , வாழ்வுக்காகவும் வேறு வேறு இடத்திற்கு சென்று வாழ கூடியவர்கள் மீண்டும் அவர்கள் சிறு வயதில் வாழ்ந்த இடத்திற்கே வந்து குடும்பமாக கூடுகின்றனர். அவர்களுடைய சிறு வயதிலிருந்து ஏற்பட்ட ஒவ்வொரு சம்பவங்களும் அங்கு அவர்கள் இருந்து உணர வேண்டிய விஷயம். உணருகின்றனர். மகிழ்ச்சியான தருணங்கள், சோகமான தருணங்கள் என எல்லாமே நிலையாக ஒரு இடத்தில் இருந்து பேசுகின்றனர். அதனால் இந்த அமைதியும் நிதானமும் இயற்கையாகவே இந்த படத்திற்கு அமைகிறது. 


குடும்பத்தை பற்றி தான் ஏராளமான கதைகள் தமிழ் சினிமாவிலேயே வருகிறதே? எதனால் நான் இதை பார்க்க வேண்டும் என்ற கேள்வி பார்வையாளர்களுக்கு தோன்றலாம். வாரிசு, கடைக்குட்டி சிங்கம் என ஏராளமான படங்கள் இதற்காகவே வணிக சினிமாவில் எடுக்க படுகின்றன. ஆனால் அதில் குடும்பத்தை புனித படுத்தும் முயற்சியே நடக்கிறது. 

இந்த படத்தில் குடும்பத்தை குடும்பமாக இருக்க விடுவது தான் இந்த படத்தின் பலம். 


உதாரணமாக இளைய மகனிற்கு, மூத்த மகன் இறந்து போயிருந்தாலும் அவன் மீது பொறாமை இருக்கிறது.  தன்னை விட தன் அண்ணனை நேசிக்கிறார்கள் என்று இளைய மகனிற்கு தோன்றுகிறது. அப்பா ஒரு மருத்துவராக இருந்தவர். அவருடைய இளைய மகனை  மருத்துவராக்க வேண்டும் என்று நினைக்கிறார். ஆனால் அவன் வேறு வேலை தேடி கொண்டதால் அவருக்கும் இந்த மகனுக்கும் பெரிதாக கருத்து உடன்பாடு இல்லை. ஏற்கனவே திருமணம் ஆன  பெண்ணை அவளுடைய கணவன் இறந்து போனதால் திருமணம் செய்து இருப்பான் இளைய மகன். அது அவனுடைய  அம்மாவிற்கு விருப்பம் இல்லை. ஆனாலும் எல்லாரும் கூடுகிறார்கள். பேசுகிறார்கள். சமைக்கிறார்கள். உண்கிறார்கள். புகைப்பட தொகுப்புகளை பார்க்கிறார்கள். 

இந்த படத்தில் முக்கியமான கதாபாத்திரமாக அந்த இளைய மகனின் சிறுவன் இருப்பான். முதலில் அவன் தன் அம்மாவிடம் இறந்தவருக்கு கடிதம் எழுதி பயன் இல்லை, அவர்கள் அதை படிக்கக் கூட போவது இல்லை என்று கூறுவான். வீட்டிற்கு வந்து அவன் அந்த குடும்பத்தை சேராதவனாக முதலில் உணர்வான். பின்னர் அந்த குடும்பத்தில் தன் தாத்தாவிடம் பேசும்

காட்சி மிகவும் அற்புதமான காட்சியாக இருக்கும். 



அந்த தாத்தா அவனிடம் நீ மருத்துவனாக ஆக வேண்டும் என்று சொல்வார். ஆனால் அந்த சிறுவன் தான் ஒரு பியானோ கலைஞராக வேண்டும் என்று சொல்வான்.  அவனுடைய உண்மையான தந்தை பியானோ கலைஞராக இருந்து இருப்பார். 

இறுதியில் தன் தந்தையை வானத்தில் நோக்கி, நான் பியானோ கலைஞராக வருவேன் இல்லையெனில் மருத்துவராக வருவேன் என்று பேசுவான். அவன் தாத்தா கூறியது அவனுக்கு சரி என்று தோன்றியதாலோ அல்லது அவனுக்கு அவரை பிடித்து போனதாலோ இரண்டாவது விருப்பமாக மருத்துவர் ஆவேன் என்று கூற முடிகிறது. 


படத்தில் இசை மிகவும் இயற்கையாகவே காட்சிகளோடு நன்கு இயைந்து இருக்கும். ஒளிப்பதிவும் சிறப்பாக, மனதை அமைதி படுத்தும் வகையில் இருக்கும். 


பொதுவாக சிறு வயதில் அம்மா வழி சொந்தத்தில் உள்ள குழந்தைகள் அனைவரும் கூடும் போது அவர்கள் குதூகலமாக விளையாடுவார்கள். சிரிப்பார்கள். தன்னை சுற்றி நிகழும் எதை பற்றியும் கவலைப்படாமல் விளையாடுவார்கள். ஆனால் அவர்கள் கூடி இருப்பதோ இறந்த மகனின் நினைவு நாளுக்காக. இந்த மரண நிகழ்வை சுற்றி கூட ஒரு சில விதைகள் முளைக்கின்றன. மரணமும் உயிரும் இது போல உரையாடுகின்ற இடங்கள் நிறைய இருக்கின்றன. 

இந்த படம் கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம் என்று இதன் மீது ஒரு அழுத்தத்தை ஏற்படுத்த விரும்பவில்லை. கிழக்கு ஆசிய சினிமாவை பற்றிய உரையாடல்களில் முதல் படியாக இது இருக்கட்டும்.

Comments

Popular posts from this blog

வெர்ட்டிக்கல் சினிமா - புது அழகியலா ? புது வியாபாரமா ?

A Letter of Motivation by Benoit Rouilly

Contemplation Cinema Screening (FAQ)